Saturday, January 20, 2007

பதற்றம்

‘என்னடா சந்துரு! இன்னும் ஷு போடலையா? சாப்பிடறதுலதான் ‘ஊசித் தொண்டை தாழி வயிறு’ன்னா எல்லாத்துலேயுமே உங்கப்பாவைக் கொண்டிருக்கியே. நிதானம்னா இப்படி ஒரு நிதானமா?’ என்றவாறே வேலைக்குச் செல்லும் பரபரப்பில் மகனை அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள் எழிலரசி.

‘என்னையும் அப்பாவையும் குறை சொல்லலேன்னா உனக்குப் பொழுது போகாதே!’ என்று பதிலுக்கு முணுமுணுத்தவாறே ஷு லேஸைப் போட்டுக்கொண்டிருந்த சந்துருவுக்கு வயதென்னவோ பத்துதான். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவன் தங்கை கோபிகா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

‘என்ன ரெடியாயிட்டீங்களா, கிளம்பலாமா?’ என்றவாறே அவரவர் பைகளில் மதிய உணவுக்கான லஞ்ச் பாக்ஸ்களை அடைத்துவிட்டு எழிலரசி நிமிர,

‘அம்மா! அவசரமா எனக்கு ரெண்டுக்கு வருதும்மா. இதோ போயிட்டு வந்திடறேன்!’ என்றவாறே லெட்ரீனை நோக்கி கோபிகா ஓடத் தொடங்கியதுதான் தாமதம்.

‘சனியன்க! உயிரை வாங்கறதுக்குன்னே வந்து பொறந்திருக்குங்க!’ எனக் கோபத்தில் அரற்றியவள், கோபிகாவின் முதுகில் ஒரு போடு போட்டாள். தொடர்ச்சியாக, ‘நான் செத்து நீங்க திண்டாடறபோதுதான் உங்களுக்குப் புத்தி வரும் பாருங்க!’ என்று கூற,

‘ச்சீ! வாயை மூடுடி. எப்பவும் இதே பல்லவிதானா உனக்கு? நல்லதே தோணாதா உனக்கு? எப்பப் பார் இதே ரோதனையாப் போச்சு உன்னோட!’ என்று எழிலரசியைக் கடிந்தவாறே உள் அறையிலிருந்து வெளிப்பட்டான் அவளது கணவன் பாஸ்கர்.

‘நல்லா கேளுப்பா! அம்மாவுக்கு அப்பவாவது புத்தி வரட்டும்பா. அம்மா செத்துப்போய்தான் எங்களுக்குப் புத்தி வரணுமா? உயிரோடிருந்து அம்மா அதை எங்களுக்குச் சொல்லி வளர்க்கக் கூடாதா, என்ன?’ என்றான் துறுதுறு சந்துரு.

‘சந்துரு! அப்படியெல்லாம் அம்மாவை பேசக்கூடாது! ஸ்கூலுக்குக் கிளம்புங்க ரெண்டுபேரும். நீயும் கிளம்பு எழிலரசி. பசங்களா அம்மாவைப் பத்திரமா அழைச்சுண்டு போங்க!’ என்று கிண்டலாகச் சொல்லியவாறே அலுவலகத்துக்குக் கிளம்பினான் பாஸ்கர்.

சைதாப்பேட்டை ரயில் நிலையம்.

வழக்கத்துக்கு மாறாக சில நிமிஷங்களுக்கு முன்னதாகவே ‘மகளிர் ஸ்பெஷல்’ வந்து சென்றுவிட்டதை அறிந்ததில் எழிலரசியின் கோபம் மறுபடி உச்சத்தை எட்டியது.

‘சனியன்க, சனியன்க! நேரத்துக்குக் கிளம்பணும்கிறது துளிக்கூட இதுங்க புத்தியிலே இன்னும் உறைக்கலே!’ எனப் புலம்பியவாறே, இரு குழந்தைகளின் தோள்பட்டையிலும் ஒரு கிள்ளு கிள்ளினாள். குழந்தைகள் எதுவும் சொல்லாமல் அம்மாவின் நிலையறிந்து அழாமல் வலி பொறுத்தன.

எப்போதும் வரும் நேரத்தைக் காட்டிலும் அன்று சற்று கூடுதலாகவே நேரத்தை எடுத்துக்கொண்டு மின்சார ரயில் வந்ததால், கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவரவர்களுக்கு அவரவர் அவசரம் என்பது போல் ரெயிலில் முண்டியடித்து ஏறினர்.

டிரைவரையொட்டிய லேடீஸ் கம்பார்ட்மெண்டில் கூட்டத்தோடு கூட்டமாக எழிலரசி குழந்தைகளைத் திணித்துவிட்டு அவள் தொற்றிக்கொள்வதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது.

கம்பார்ட்மெண்டின் உள் கைப்பிடியை எழிலரசியின் ஒரு கை பிடித்திருக்க, இன்னொரு கையோ கூட்ட நெரிசலில் ஒன்றும் செய்ய முடியாமல் - சரியான பிடிப்பு கிடைக்காமல் பதறித் தவித்தது. கூட்டமோ மேலும் மேலும் நெருக்க, தொங்கியவாறே பிடித்திருக்கும் பிடியும் நழுவி, கால்கள் சக்கரத்தில் சிக்கினால் எந்நேரமும் உயிர் போகலாம் என்ற பயம் தந்த நிலையில் அலறக்கூடத் தோன்றவில்லை எழிலரசிக்கு. மரண அவஸ்தையை ‘நேருக்கு நேர்’ அந்த க்ஷணம் உணர்ந்தவாறே அவள் பயணிக்க, குழந்தைகளோ ‘அம்மா, அம்மா!’ என அலறித் துடித்தனர். மொத்தக் கூட்டமும் ஒருவித பீதியில் அலற, நிலைமையை உணர்ந்த டிரைவர் மெதுவாக பிரேக் போட, ரயில் ஸ்டேஷனுக்கருகில் இருந்த ரயில்வே கேட்டைத் தாண்டிச் சென்று நிற்க, தெய்வாதீனமாக ரயில் சக்கரங்களில் சிக்காமல் சற்று தள்ளிச்சென்று விழுந்தாள் எழிலரசி - சிற்சில காயங்களுடன்.

உயிரின் சுவையை உணர்ந்ததாலோ என்னவோ, இப்போதெல்லாம் கணவனிடமும் சரி, தன் குழந்தைகளிடமும் சரி, அவர்கள் ரோதனையாகக் கருதிய ‘அந்தப் பல்லவி’யை எழிலரசி பாடுவதே இல்லை.

Monday, October 30, 2006

மாற்றம் - சிறுகதை

மாற்றம

சைதை முரளி

'பெரியவர் வேதாசலத்தைப் பார்த்து மாதம் ஒன்றிரண்டு இருக்குமா, ஆளே மாறிட்டாரே!' - மனத்துள் கணக்குப் போட்ட சுதாகருக்கு, 'இருக்கும்!' என நினைவுச் சுழல் சுழன்று பதில் சொன்னது.

வேதாசலத்துக்கு வயது கிட்டத்தட்ட அறுபதுக்கு இருக்கும். ஆனால், எப்போதும் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று ஆள் படு ஸ்மார்ட்டாய் நாற்பது வயது தோற்றத்தில் இருப்பார். மாறாக இன்று நரைத்த தாடியுடன் தலைமுடியும் நரைத்து கிட்டத்தட்ட வயது நூறைக் காண்பிக்கும் விதமாகக் காட்சியளித்தார்.

சுதாகர் ஒருமுறை சலூனில், அவர் தன் தலைக்கு டை அடிப்பதையும், மீசையை 'ட்ரிம்' செய்வதையும் நேரடியாகவே பார்த்ததில் அவரிடம்,

'இந்த வயசுலேயும் இதெல்லாம் தேவைதானா?' என அவரிடமே கேட்டான்.

அதற்கு அவர்,

'காலத்துக்குத் தக்கமாதிரி நாம நம்மல மாத்திக்கலேன்னா உறவுகள்கூட கண்டுக்காதுப்பா. இவ்வளவு ஏன்? என் பேத்தியோட படிக்கற பசங்க வீட்டுக்கு வரும்போது என்னைப் பார்த்தா, 'ஹாய் அங்கிள்!'னு கூப்பிடறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?' என்றார்.

அப்படி சொன்ன வேதாசலத்திடம்தான் இன்று எத்தனை மாற்றங்கள்! யோசித்த சுதாகருக்குப் பதில் தரும் விதமாய் வேதாசலமே பேச ஆரம்பித்தார்...

'பேத்தியோட படிக்கற பசங்க 'அங்கிள்'னு கூப்பிட்டது எவ்வளவு சந்தோஷமா இருந்ததுன்னு உங்கிட்ட சொல்லியிருக்கேன். சமீபத்துல ஒருமுறை என்பேத்தியே விளையாட்டா என்னை 'அங்கிள்'னு அவ ஸ்கூல்மேட்ஸோட சேர்ந்து கூப்பிட்டுட்டாப்பா. இதை இதைத்தான் என்னால தாங்கமுடியல! அதான் என் மாற்றத்துக்குக் காரணம்!' என்றார்.