மாற்றம்
சைதை முரளி
'பெரியவர் வேதாசலத்தைப் பார்த்து மாதம் ஒன்றிரண்டு இருக்குமா, ஆளே மாறிட்டாரே!' - மனத்துள் கணக்குப் போட்ட சுதாகருக்கு, 'இருக்கும்!' என நினைவுச் சுழல் சுழன்று பதில் சொன்னது.
வேதாசலத்துக்கு வயது கிட்டத்தட்ட அறுபதுக்கு இருக்கும். ஆனால், எப்போதும் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று ஆள் படு ஸ்மார்ட்டாய் நாற்பது வயது தோற்றத்தில் இருப்பார். மாறாக இன்று நரைத்த தாடியுடன் தலைமுடியும் நரைத்து கிட்டத்தட்ட வயது நூறைக் காண்பிக்கும் விதமாகக் காட்சியளித்தார்.
சுதாகர் ஒருமுறை சலூனில், அவர் தன் தலைக்கு டை அடிப்பதையும், மீசையை 'ட்ரிம்' செய்வதையும் நேரடியாகவே பார்த்ததில் அவரிடம்,
'இந்த வயசுலேயும் இதெல்லாம் தேவைதானா?' என அவரிடமே கேட்டான்.
அதற்கு அவர்,
'காலத்துக்குத் தக்கமாதிரி நாம நம்மல மாத்திக்கலேன்னா உறவுகள்கூட கண்டுக்காதுப்பா. இவ்வளவு ஏன்? என் பேத்தியோட படிக்கற பசங்க வீட்டுக்கு வரும்போது என்னைப் பார்த்தா, 'ஹாய் அங்கிள்!'னு கூப்பிடறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?' என்றார்.
அப்படி சொன்ன வேதாசலத்திடம்தான் இன்று எத்தனை மாற்றங்கள்! யோசித்த சுதாகருக்குப் பதில் தரும் விதமாய் வேதாசலமே பேச ஆரம்பித்தார்...
'பேத்தியோட படிக்கற பசங்க 'அங்கிள்'னு கூப்பிட்டது எவ்வளவு சந்தோஷமா இருந்ததுன்னு உங்கிட்ட சொல்லியிருக்கேன். சமீபத்துல ஒருமுறை என்பேத்தியே விளையாட்டா என்னை 'அங்கிள்'னு அவ ஸ்கூல்மேட்ஸோட சேர்ந்து கூப்பிட்டுட்டாப்பா. இதை இதைத்தான் என்னால தாங்கமுடியல! அதான் என் மாற்றத்துக்குக் காரணம்!' என்றார்.